டிராபிக் போலீஸ் போட்ட அபராதம்
டிராபிக் போலீஸ் போட்ட அபராதத்தை எப்படி ரத்து செய்ய வேண்டும் தெரியுமா?ச்சே இது தெரியாம இவ்வளவு நாளா அபராதம் கட்டிருக்கோமே..
உங்கள் வாகனங்களுக்கு டிராபிக் போலீசார் அல்லது அட்டோமெட்டிக் சிஸ்டம் தவறுதலாக அபராதம் விதித்து செல்லான் போட்டிருந்தால் அந்த செல்லானை எப்படி கேன்சல் செய்வது அதற்கான வழி முறைகள் என்ன? முழுமையாகக் காணலாம் வாருங்கள்.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் எல்லோராலும் ஓட்ட முடியாது. அதற்கான ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டும். இந்தியாவில் போக்குவரத்துத் துறை சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துத் துறை அலுவலகம் அமைக்கப்பட்டு அங்கு மக்களுக்குச் சோதனை நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறுபவர்களுக்கே வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
இப்படியாக வாகனம் வாங்கிவிட்டு வாகனம் ஓட்டும் போது சாலைகளில் சாலை விதிகளைக் கடைப் பிடிக்க வேண்டும்.வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் வாங்கும்போதே இந்த விதிகள் குறித்து சோதனை நடத்தப்பட்டிருக்கும். இந்நிலையில் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது இந்த சாலை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சாலை விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கினால் போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு அபராதம் விதிப்பார்கள்.
முன்னர் போலீசார் அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு இப்படியாக விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிப்பார்கள். ஆனால் இப்பொழுது அது இந்தியா முழுவதும் ஒரே தளத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசு பரிவாகன் என்ற ஒரு தளத்தை உருவாக்கி அதில் ஒரு வாகனத்திற்கு எத்தனை முறை அபராதம் விதித்தாலும் அது அந்த தளத்தில் அப்டேட் செய்யப்படும்.
இதற்கு போலீசார் வாகன தணிக்கையில்தான் ஈடுபட வேண்டும் என்பதில்லை மாறாக போலீசார் நுண்ணறிவு கேமராக்களை நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தியுள்ளனர். அந்த கேமராக்கள் சாலைகளில் யாராவது விதிமுறை மீறல்களில் ஈடுபட்டால் உடனடியாக அந்த நபர் விதிமுறை மீறும் போது புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தில் உள்ள அந்த வாகனத்தின் எண்ணை ஆதாரமாக வைத்து அந்த எண்ணிற்கு அபராதம் விதிக்கப்படும். இந்த விஷயம் தானாக நடைபெறும்.
இப்படியாகத் தானியங்கி கேமராக்கள் மட்டுமல்ல போலீசாருக்கும் ஒரு ஆப் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சாலைகளில் செல்லும் போது யாராவது விதிமீறல் செய்தால் அவர்கள் அவர்களை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து அதில் பதிவேற்றினால் அதை ஆதாரமாகக் கொண்டும் அபராதம் விதிக்கப்படும். இப்படியாக அபராதம் விதிக்கப்படுவது பரிவாகன் தளத்தில் பதிவேற்றப்படும்.
உங்கள் வாகனத்திற்கு இப்படியாக ஏதாவது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரி பார்க்க நீங்கள் இபரிவாகன் தளத்திற்குச் சென்று நீங்கள் உங்கள் வாகனத்தின் எண், வாகனத்தின் சேசிஸ் எண் ஆகியவற்றைக் கொடுத்து ஏதாவது அபராதம் விதிக்கப்படுகிறதா எனச் சோதனை செய்து கொள்ளலாம். இப்படியாக அபராதம் விதிக்கப்படுவதற்குப் பெயர் செல்லான் என அழைக்கப்படுகிறது. செல்லான்கள் வாகனங்களுக்கும், லைசென்ஸ்களுக்கும் வழங்கலாம்.
வாகனம் விதிமுறை மீறலில் ஈடுபட்டால் அதாவது முறையாக இன்சூரன்ஸ் இல்லாதது, வாகனத்தின் ஹெட்லைட் எரியாதது,விதிமுறைகளை மீறி வாகனத்தில் மாடிஃபிகேஷன் செய்வது உள்ளிட்ட வாகனம் சார்ந்த விஷயங்களுக்கு வாகனத்தின் மீதும், ஓட்டுநர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற ஒட்டுநர் சார்ந்த விதிமுறை மீறல்களுக்கு ஓட்டுநர் உரிமம் மீது செல்லான்கள் விதிக்கப்படும். இந்த செல்லான்களை ஆன்லைன் மூலமே கட்டலாம். இதற்காகப் பிரத்தியேகமாக எம்பரிவாகன் என்ற செல்போன் ஆப்களும் உள்ளன.
இந்த தகவல் பலருக்குத் தெரியாது இப்பொழுது நீங்கள் உங்கள் வாகனத்திற்கான அபராதம் குறித்து செக் செய்தால் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குச் செல்லான் இருக்கக்கூடும். இப்படியான பிரச்சனைகளைப் பலர் புதிதாகச் சந்தித்து வருகின்றனர். பலருக்கு தாங்கள் விதிமுறைகளை மீறவேயில்லை. ஆனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் பலருக்கு அந்த செல்லான்களை எப்படி கேன்சல் செய்ய வேண்டும் எனத் தெரிவதில்லை. ஆனால் பரிவாகன் தளத்திலேயே இதற்கான ஆப்ஷன்கள் உள்ளன. இப்படியாக உங்களுக்குத் தவறுதலாகச் செல்லான்கள் விதிக்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றால் குறிப்பிட்ட அந்த விதிமுறை மீறலை நீங்கள் செய்ய வில்லை என நிரூபணம் செய்ய வேண்டும். இப்படியாகச் செல்லான்கள் விதிக்கப்படும் போது அதற்கான ஆதாரங்கள் அதனுடன் இருக்கும் அந்த ஆதாரங்கள் தவறானது என உங்களுக்குத் தெரியவந்தால் இந்த ஆப்ஷன் மூலம் உங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய முடியும்.
இந்த அபராத செல்லான்களை ரத்து செய்யும் சிஸ்டத்திற்கு பெயர் Grievance System. ஆன்லைன் மூலம் இந்த சிஸ்டமை பயன்படுத்த echallan.parivahan.gov.in/gsticket/ என்ற இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும். அங்கு நீங்கள் உங்கள் பெயர், செல்போன் எண், உங்களுக்குத் தவறுதலாக விதிக்கப்பட்ட செல்லான் எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அதற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் எப்படி இந்த செல்லான் தவறானது என நீங்கள் விளக்கம் கொடுக்கலாம். மேலும் அத்துடன் இந்த செல்லான் தவறானது என்பதற்கான ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் அந்த ஆவணத்தையும் இந்த புகார் உடன் இணைக்கலாம்.
இதை எல்லாம் சேர்ந்து புகாரளிக்கும் பட்சத்தில் இது நேரடியாகப் போக்குவரத்து போலீசாருக்கு செல்லும் அங்கு அவர்கள் உங்களுக்கு விதிக்கப்பட்ட செல்லான், அதற்கான ஆதாரம், மற்றும் அதை மறுக்கும் வகையில் நீங்கள் எழுதியுள்ள விளக்கம் மற்றும் அதை நிரூபிக்கும் வகையில் இணைக்கப்பட்ட ஆதாரங்களை எல்லாம் சோதனை செய்வார்கள். அதில் உங்களுக்குத் தவறாகச் செல்லான்கள் விதிக்கப்பட்டிருந்தது. தெரிந்தால் அந்த செல்லானை போலீசார் கேன்சல் செய்வார்கள்.
இப்படியாக நீங்கள் புகார் அளித்தால் அதற்கான டிக்கெட் எண் ஒன்று வழங்கப்படும். அந்த புகார் எந்த நிலையில் இருக்கிறது என நீங்கள் அந்த புகார் எண்ணை வைத்து செக் செய்து கொள்ளலாம். அதை https://echallan.parivahan.gov.in/gsticket/ இந்த தளத்தில் நீங்கள் செக் செய்து கொள்ளலாம். ஒரு வேலை நீங்கள் அளித்த விளக்கம் மற்றும் ஆதாரம் உங்கள் செல்லானிற்கு சம்மந்தம் இல்லாமலோ அல்லது போதுமானதாக இல்லாமலோ இருந்தால் இந்த புகார் ரிஜெக்ட் ஆகவும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் செல்லானிற்கான பணத்தைக் கட்டித்தான் ஆக வேண்டும்.
இந்த பரிவாகன் தளத்தில் ஏதேனும் தொழிற்நுட்ப கோளாறுகள் இருந்தால் அது குறித்து நீங்கள் பரிவாகன் தள குழுவினருக்குப் புகாரை இமெயில் மூலம் அனுப்பலாம் அதற்கு helpdesk-echallangov.in என்ற இமெயில் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இது போக 0120-2459171 என்ற எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் தொழிற்நுட்ப பிரச்சனை தொடர்பான விளக்கங்கள் மற்றும் புகார்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
Leave a Comment