பட்டா பெயர் மாற்றம் மறுப்பு வக்கீலுக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டயீடு
வணக்கம் நண்பர்களே…!
பட்டா பெயர் மாற்றம் மறுப்பு வக்கீலுக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டயீடு…!
நிலம் கையகப்படுத்தியதை ரத்து செய்தும், வருவாய் ஆவணங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பெயர் மாற்றம் செய்யாததால், வழக்கறிஞருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க, வேலுார் மாவட்ட நிர்வாகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞராக பணிபுரிபவர், கே.ஏ.ரவீந்திரன். இவருக்கு சொந்தமாக, வேலுார் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, குடநகரம் கிராமத்தில் நிலங்கள் உள்ளன.
அவற்றில், ஒரு பகுதியை, ஆதிதிராவிடர் நல திட்டத்துக்காக, 1996ல், அரசு கையகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்து, அரசுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ரவீந்திரன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலம் கையகப்படுத்தியதை ரத்து செய்து, 2009ல் உத்தரவிட்டது. பின், வருவாய் ஆவணங்களில், ரவீந்திரன் பெயரை பதிவு செய்யவில்லை; பட்டா மாற்றமும் செய்யவில்லை, பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை இல்லை.
வருவாய் ஆவணங்களில் தன் பெயரை பதிவு செய்யவும், தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யவும், வேலுார் மாவட்ட கலெக்டர், குடியாத்தம் தாசில்தார், சிறப்பு தாசில்தாருக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில், ரவீந்திரன் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி என்.சேஷசாயி பிறப்பித்த உத்தரவு:வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்யாததால், லாபகரமாக சொத்தை அனுபவிக்கும் உரிமை, மனுதாரருக்கு மறுக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி அல்லாமல், ஒருவரது சொத்துரிமையில், அரசு தலையிட அதிகாரமில்லை. சொத்துக்கு சொந்தம் கொண்டாட, பட்டா அவசியம்.
10 ஆண்டுகளாக, பட்டா மாற்றம் கோரியும், அதை செய்யாதது, ஒருவரது சொத்துரிமையில், நிர்வாகம் தலையிடுவது போலாகும். ஆவணங்களில் மாற்றம் செய்யாதது, அவரது விருப்பம் போல, சொத்தை அனுபவிக்க முடியாமல், கட்டுப்பாடு விதிப்பதாகும். எந்த சட்டப்படியான நியாயமும் இன்றி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒருவரது சொத்துரிமையில் குறுக்கிடுவதற்காக, மனுதாரருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
எனவே, மனுதாரரின் பெயரை பதிவேட்டில் பதிவு செய்ய, குடியாத்தம் தாசில்தாருக்கு உத்தரவிடப்படுகிறது. மனுதாரருக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்காக, 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு, அரசு நிர்வாகம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
WP .No.19428/2020date06/01/2021,MHC Order.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:https://drive.google.com/file/d/1WhiyRjgZYHwKxcHWlSnBr2mPxA8As6V-/view?usp=drivesdk
நன்றி…!
மிக முக்கியமான தீர்ப்பு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது இந்த தீர்ப்பின் அடிப்படையில் பல மக்களின் உடமைகளை காப்பாற்றலாம் வெகு சிறப்பான தீர்ப்பு வாழ்த்துக்கள்?