கொடுமைப்படுத்தும் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறலாம்
பொய்யாக கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று கூறுவது, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவது, தற்கொலை செய்து கொள்வது போல நாடகமாடுவது, பெற்றோரை விட்டு பிரிந்து தனிக்குடித்தனம் அழைப்பது ஆகியவை மன அழுத்தத்தை கொடுக்கும் கொடுமைகளாகும் என்று இந்த தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மீனா என்பவருக்கும் நரேந்திரா என்பவருக்கும் 1992 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மறு வருடமே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மீனா திருமணத்திற்கு பிறகு ஒருமாதம் கூட கணவருடன் சந்தோஷமாக வாழவில்லை. எதற்கெடுத்தாலும் கணவரை சந்தேகம் பட்டுள்ளார். கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் உறவு இருப்பதாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டி உள்ளார். பாத்ரூமில் சென்று கதவை பூட்டிக் கொண்டு, மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொள்வது போல நாடகமாடி பயமுறுத்தி உள்ளார். இது போன்ற கொடுமைகளை மீனா தொடர்ந்து செய்து வந்ததால் கணவர் வேறு வழியில்லாமல் விவாகரத்து கேட்டு பெங்களூர் குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கணவர் கேட்டபடி விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.
அதனை எதிர்த்து மனைவி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து தீர்ப்பை ரத்து செய்து மனைவிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.
கணவர் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
வழக்கை நீதியரசர்கள் திரு. அணில் R. தேவ் மற்றும் L. நாகேஸ்வரராவ் ஆகியோர்கள் விசாரித்தனர்.
மீனா பாத்ரூம் சென்று கதவை பூட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளார். அதனை கணவர் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தடுத்து நிறுத்தியுள்ளார். இல்லை என்றால் மீனா இறந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு காரணம் கணவர்தான் என்று கருதி அவர் சட்டத்தின் பிடியில் சிக்கி இருப்பார். இதனால் கணவருக்கு கடுமையான துன்பங்கள் ஏற்பட்டிருக்கும். மீனா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, கணவர் எந்த தவறும் செய்ததாக தெரியவில்லை. கணவரை சட்டத்தின் பிடியில் சிக்க வைத்து, அவரை சீரழிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இது மிகுந்த மன அழுத்தத்தை கொடுக்கும் சம்பவமாகும். இது மிக கொடுமையான செயல். ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் இதனை சாதாரணமாக கருதி இருக்கிறது. கொடுமைப்படுத்துதல் என்ற ஒரு காரணம் விவாகரத்து வழங்க போதுமானது. தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவது கொடுமைப்படுத்துதல் ஆகும்.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் ” பங்கஜ் மகாஜன் Vs டிம்புல் என்ற காஜல் (2011-12-SCC-1) என்ற வழக்கில், தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதை கொடுமைப்படுத்துதல் என்கிற செயலாக கருத வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
மேலும் மீனா அவருடைய கணவரை அவருடைய குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். கணவரின் வருமானத்தில் தான் அவரது பெற்றோர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரு மகனை வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கிய பெற்றோரை வயதான காலத்தில் பராமரிக்க வேண்டியது மகனின் கடமையாகும்.
பொதுவாக மேற்கத்திய சிந்தனைகள் இந்தியாவில் உள்ள மக்களிடம் இல்லை. அந்த கலாச்சாரத்தில்தான் திருமணம் நடைபெற்றவுடன் அல்லது உரிய வயதை அடைந்தவுடன் மகன் குடும்பத்தை விட்டு தனியாக பிரிந்து சென்று விடுவது வழக்கம். பொதுவான சூழ்நிலைகளில் திருமணத்திற்கு பிறகு கணவரின் குடும்பத்தினரோடு
ஒன்றாக சேர்ந்து வாழ மனைவி வேண்டும். அந்த குடும்பத்தில் ஓர் அங்கமாகவே ஒரு பெண் மாறிவிடுவார். எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லாமல் கணவர் அவருடைய குடும்பத்தினரை விட்டு பிரிந்து தன்னுடன் மட்டுமே வாழ வேண்டும் என்று ஒரு மனைவி வற்புறுத்துவது கணவருக்கு செய்யும் கொடுமையாகும்.
இந்திய கலாசாரத்தில் ஒரு மகன் தன்னுடைய பெற்றோரை பராமரிப்பது நடைமுறையிலுள்ள ஒரு வழக்கமாகும். அது புனித கடமையாகும். இதற்கு மாறாக எவ்வித காரணமும் இன்றி தனிக்குடித்தனம் செல்ல கணவரை வற்புறுத்துவது ஏற்க முடியாத கொடுமை என்ற செயலாகும்.
கணவர் வேலைக்கார பெண்ணுடன் உறவு வைத்துள்ளார் என்று கூறினால் அதை மனைவி நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையில் இதுவும் கொடுமையாகும். ஆதாரங்கள் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை கணவர் மீது சுமத்துவது மனரீதியான ஒரு கொடுமையாகும். கள்ள உறவு என்கிற குற்றச்சாட்டு ஒருவரின் மதிப்பு, அந்தஸ்து ஆகியவற்றின் மீது நடத்தப்படுகிற பயங்கரவாத தாக்குதல் ஆகும். இந்த கருத்தை உச்சநீதிமன்றம் ” விஜய்குமார் ராமச்சந்திரா பாத்தே Vs நீலா விஜயக்குமார் பாத்தே ( AIR-2003-SC-2462)” என்ற வழக்கில் தீர்ப்பாக கூறியுள்ளது.
மீனா கணவரை மன ரீதியாக மிகவும் கொடுமைப்படுத்தி உள்ளார். எனவே கணவருக்கு விவாகரத்து வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றம்
C. A. No – 3253/2008
Dt – 6.10.2016
நரேந்திரா Vs K. மீனா
2016-7-MLJ-726
2016-6-CTC-440
2016-9-SCC-455
Leave a Comment