நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற…
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்க வேண்டிய சில முக்கிய வழிமுறைகள்:-
- சமூக ஆர்வலர்கள், முதலில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைச் சரியாக அடையாளம் காண வேண்டும்.
அதாவது, ஆக்கிரமிப்பு எந்த சர்வே எண்களில் உள்ளது?
எவ்வளவு பரப்பளவு ஆக்கிரமிப்பில் உள்ளது?
யார் யார் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்?
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடமானது, நீர் நிலைகளில் வாய்க்கால், குளம், குட்டை, ஏரி, மதகு, ஆறு உட்பட எந்த வகைப்பாட்டில் உள்ளது….
என்ற விவரம் போன்றவற்றைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
தற்பொழுது, இணையம் வழியாகவே கிராம வரைபடம் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. எனவே, அனைவரும் கிராம வரைபடம் பெற்றுக் கொள்ளுங்கள்.
- மேற்படி நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு இருந்தால், மேற்படி ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லி வருவாய் வட்டாட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்க வேண்டும்.
மேற்படி மனுவை கையாலும் எழுதலாம். ஆனால், தட்டச்சு செய்து அனுப்புவது மிகவும் நல்லது.
முடிந்தவரை கோரிக்கை மனுவை ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவுத் தபாலில் (RPAD) அனுப்புங்கள். மேற்படி அஞ்சல் அலுவலகம் வழங்கும் ரசீதை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒப்புகை அட்டைத் திரும்ப வரவில்லையேல், அஞ்சல் அலுவலக இணைய தளம் வழியாக ஒப்புகை பெற்றுக் கொள்ளலாம். அஞ்சல் அலுவலகத்தில் கடிதம் எழுதிக்கொடுத்தும் பெற்றுக்கொள்ளலாம்.
- நீங்கள் அனுப்பிய கோரிக்கை மனு மீது, 30 நாட்களுக்குள் வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், வருவாய் கோட்டாட்சியருக்கு முதல் மேல்முறையீட்டு மனு அனுப்புங்கள்.
- வருவாய் கோட்டாட்சியரும் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்புங்கள்.
- அதன் பிறகும் ஆக்கிரமிப்பை அகற்ற எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும்.
- உயர்நீதிமன்றம், தங்கள் கோரிக்கை மனுவை 10 முதல் 12 வாரங்களுக்குள் சட்டப்படி விசாரித்து, ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவைகளை அகற்ற உத்திரவிடும்.
- மேற்படி உயர்நீதிமன்ற உத்தரவை சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும். அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லையேல், அவருக்கு ஒரு நீதிமன்ற அவமதிப்பு மனு அனுப்பிவிட்டு, வட்டாட்சியர் பெயருடன் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
மேற்படி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்ற உத்தரவைப் பெற்ற தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
- அதன்பிறகு, சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியருக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பும். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நேரடியாக உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிடும்.
- அதன் பிறகும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லையேல், சிறை தண்டனையோ அல்லது சூழ்நிலைக்கு உகந்த வேறு நடவடிக்கையோ எடுக்கும்.
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராடும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு பொறுமையும், மன வலிமையும் மிகவும் அவசியம்.
- அதாவது, ஆக்கிரமிப்பாளர்கள் கூலிப்படை ஏவி கொலை மிரட்டல் விடுப்பார்கள். ஏற்கனவே, தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் புகார் கொடுத்து வையுங்கள்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு, “தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் – 2007” (Tamilnadu protection of Tanks and Eviction of Encroachment Act, 2007) இயற்றியுள்ளது.
மேற்படி நடைமுறைகளை சுருக்கமாகவும், அனைவருக்கும் புரியும்படியும் எளிய தமிழில் அடியேன் கொடுத்துள்ளேன்.
Leave a Comment