பவர் மூலம் சொத்து வாங்கும்போது கவனியுங்கள்!
சொத்து பரிவர்த்தனையில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் வரிசையில் ‘பவர் ஆப் அட்டர்னி’க்கு முக்கிய பங்கு இருக்கிறது.
ஒருவர் தனது சொத்தை விற்பனை செய்வதற்கு தனது சார்பில் ஒருவரை நியமித்து அவருக்கு அதிகாரம் வழங்குவது ‘பவர் ஆப் அட்டர்னி’ எனப்படுகிறது. இந்த ‘பவர்’ கொடுக்கும் அதிகாரத்திலும் சில வரைமுறைகள் இருக்கின்றன. அதிலும் சொத்தை விற்பனை செய்வதற்கு மட்டுமே ‘பவர்’ எழுதிக்கொடுக்கப்படுவதில்லை.
‘பவர்’ அதிகாரம்
சொத்தை வாங்குவதற்கும், சொத்தை நிர்வகிப்பதற்கும் ‘பவர்’ அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். முக்கியமாக சொத்தை விற்பதற்கு முந்தைய பரிவர்த்தனை நிலையான விற்பனை ஒப்பந்தம் போடுவதற்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டிருக்கலாம்.
அப்படி இருந்தால் அவரிடம் இருந்து சொத்தை வாங்குவதற்கு முன்பு உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில் விற்பனை ஒப்பந்தம் போடுவதற்கு மட்டுமே அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பவருக்கு நேரடியாக சொத்தை விற்பனை செய்ய உரிமை கிடையாது.
அவரால் சொத்தை விற்பனை செய்வது குறித்து ஒப்பந்தம் மட்டுமே போட்டுக்கொடுக்க முடியும். சொத்தை பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக விற்பனை ஆவணம் எழுதித்தர முடியாது. அதை மீறி அவர் உண்மைகளை மறைத்து விற்பனை ஆவணம் எழுதித் தந்தாலும் அது செல்லாது.
ஆகையால் சொத்தை விற்பனை செய்பவர் ‘பவர்’ வைத்திருந்தால் அந்த சொத்தை வாங்குவதற்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது.
உறுதிபடுத்த வேண்டும்
அவர் வைத்திருக்கும் ‘பவர்’ எந்த வகையை சார்ந்தது? ….
முக்கியமாக சொத்தை விற்பனை செய்வதற்கான தகுதி படைத்ததா?….
என்பதை உறுதி படுத்திக்கொள்வது அவசியம்.
அதைவிட முக்கியமான விஷயம் மற்றொன்று இருக்கிறது. அந்த பவர் செல்லத்தக்கதாக இருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் கையில் இருக்கும் ‘பவர்’ ரத்து செய்யப்பட்டதாக இருக்கலாம்.
அவருக்கு ‘பவர்’ எழுதிக்கொடுத்த சொத்தின் உரிமையாளருக்கும், அவருக்கும் இடையே ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கலாம். அதன் காரணமாக சொத்தின் உரிமையாளர் ‘பவரை’ ரத்து செய்து இருக்கலாம்.
அப்படிப்பட்ட நிலையில் இருந்தால் ‘பவர்’ வைத்திருப்பவரால் எதுவும் செய்ய முடியாது. அவர் தன்னிடம் இருக்கும் ‘பவர்’ அதிகாரம் ரத்து செய்யப்பட்ட விஷயத்தை மறைத்து சொத்தை விற்பனை செய்ய முயற்சிக்கலாம். எனவே உஷாராக இருக்க வேண்டும்.
உரிமையாளரை நாட வேண்டும்
அப்படி விற்பனை செய்தால் அந்த சொத்தை வாங்கியவர்தான் பாதிக்கப்பட நேரிடும். அந்த சொத்து விற்பனை செல்லாது. ஆகவே சொத்தை விற்பனை செய்ய இருப்பவரிடம் இருக்கும் ‘பவர்’ அதிகாரத்தின் தன்மையை அலசி ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
முக்கியமாக அவருக்கு பவர் எழுதிக்கொடுத்த சொத்தின் உரிமையாளரை நேரடியாக சந்தித்து ‘பவர்’ அதிகாரத்தை உறுதி செய்து கொள்வது நல்லது. அதில் மற்றொரு விஷயம் ஒன்றும் இருக்கிறது.
கவனமாக செயல்பட வேண்டும்
அப்படி நேரடியாக உரிமையாளரை நாடுவது பல பிரச்சினைகளை தடுக்க உதவும். சிலர் பல வருடத்துக்கு முந்தைய பவர் அதிகாரத்தை வைத்திருக்கலாம். அது தற்போது ரத்து செய்யப்படாமல் நடைமுறையில் இருக்கிறதா? என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமாக ‘பவர்’ எழுதிக்கொடுத்த சொத்தின் உரிமையாளர் உயிரோடு இருந்தால்தான் அந்த பவர் அதிகாரம் செல்லும். அவர் உயிரோடு இருக்கும் வரைதான் ‘பவர்’ அதிகாரத்துக்கு மதிப்பு உண்டு. அவர் இறந்துவிட்டால் அந்த பவர் அதிகாரம் செல்லுபடியாகாது.
எனவே பவர் மூலம் சொத்து வாங்கும்போது சொத்தின் உரிமையாளர் உயிரோடு தான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அத்துடன் சொத்துக்கு பத்திரப்பதிவு செய்யும் நாள் வரை பவர் கொடுத்தவர் உயிரோடு தான் இருக்கிறார் என்பதை உறுதிபடுத்திக்கொள்வதும் அவசியம்.
ஏனெனில் சொத்தின் உரிமையாளர் இறந்து விட்ட பின்பு அவரிடம் பவர் அதிகாரம் பெற்றவர் சொத்தை விற்பது செல்லுபடியாகாமல் போகும் என்பதால் கவனமாக செயல்பட வேண்டும்.
Leave a Comment