அடுக்குமாடி வீட்டுக்கு பட்டா இருக்கிறதா?
அடுக்குமாடி வீடுகளை வாங்குபவர்கள் பத்திரப் பதிவு முடிந்தவுடன் எல்லா வேலைகளும் முடிந்துவிட்டதாக நிம்மதியாக இருந்துவிடுகிறார்கள். ஆனால் வேலை அத்துடன் முடிந்துவிடாது. வீட்டுக்குப் பட்டா வங்க வேண்டுமல்லவா?
தனி வீட்டுக்குப் பட்டா வாங்கலாம். ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு எப்படிப் பட்டா வாங்குவது? உதாரணமாக அடுக்குமாடிக் குடியிருப்பில் 6 வீடுகள் இருந்தால், இந்த ஆறு பேரும் தங்களுக்கெனத் தனியாக உட்பிரிவுப் பட்டா வாங்க வேண்டும்.
அடுக்குமாடி வீட்டையோ அல்லது ஒரு மனையில் ஒரு பகுதியையோ வாங்கி, பத்திரப் பதிவு செய்துவிட்டால் சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைக்கக் கூடாது. அப்படி வாங்கிய சொத்துக்குப் பட்டா வாங்க வேண்டும். அதாவது ஒரு மனையில் ஒரு பகுதியை வாங்கியிருந்தாலோ அல்லது அடுக்குமாடி வீட்டில் வீடு வாங்கியிருந்தாலோ அதற்கு உட்பிரிவுப் பட்டா வாங்குவது மிகவும் அவசியம்.
ஏனென்றால், நாம் வீடு வாங்குவதற்கு முன்போ அல்லது மனையில் ஒரு பகுதியை வாங்குவதற்கு முன்போ, அந்த மனை ஒருவருக்குச் சொந்தமாக இருந்திருக்கும். அந்த மனைக்குரிய பட்டா அவரிடம் இருக்கும். ஒரு வேளை உட்பிரிவுப் பட்டாவை வாங்காமல் இருந்துவிட்டால் பிற்காலத்தில் சிக்கல்கள் வரலாம்.
நிலங்களை வகைப்படுத்தி, அது எந்த வகையான நிலம் என்பதை ஆவணப்படுத்துவது வருவாய்த் துறையின் வேலை. இந்த நிலங்களின் உரிமையாளர்களுக்குப் பட்டாவையும் அரசு வழங்கியிருக்கும். வருவாய்த் துறை அளித்த பட்டா ஒருவருக்கு இருக்கும்போது அந்த மனை அவருக்குரியதாகவே இருக்கும்.
பத்திரம் இருந்தாலும், பட்டாதான் செல்லுபடியாகும். நாம் உட்பிரிவுப் பட்டா வாங்காமல் இருந்தால், தன்னுடைய பட்டா மூலம் நீங்கள் வாங்கிய இடத்துக்கும் உரிமை கோரலாம். பட்டாவைக் காட்டி இன்னொருவருக்குச் சொத்தை விற்பனை கூட செய்யலாம். அதனால் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
அந்தச் சொத்துப் பத்திரப் பதிவு மூலம் உங்களுக்குரியது என்பதை மறைத்துச் சொத்தை விற்கலாம். வருவாய்த் துறையின் ஆவணப்படி உங்கள் வீடு அமைந்துள்ள குறிப்பிட்ட இடத்துக்கு உட்பிரிவுப் பட்டா இல்லை என்றால் சிக்கல் எழும். உட்பிரிவுப் பட்டா பெறாமல் இருக்கும்பட்சத்தில் சொத்தை விற்றவருக்கு அனுகூலமாகிவிடும்.
அடுக்குமாடி வாங்கியவர்கள் உட்பிரிவுப் பட்டா கோரி விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மனையில் ஒரு பகுதியை வாங்கியவர்கள் உட்பிரிவுப் பட்டா கேட்டு விண்ணப்பித்தாலோ, சொத்து பிரிக்கப்பட்டு, மனையை உட்பிரிவு செய்து வருவாய்த் துறை பட்டா அளிக்கும்.
உதாரணத்துக்கு உங்கள் மனையின் சர்வே எண் 35/1 என்று வைத்துக்கொள்வோம். 6 அடுக்குமாடி உரிமையாளர்கள் உட்பிரிவுப் பட்டா கேட்டு விண்ணப்பித்தால் 35/1ஏ, 35/1பி, 35/1சி… என வரிசைப்படுத்தி உட்பிரிவுப் பட்டா வழங்குவார்கள். குறிப்பிட்ட மனை 6 பேருக்கும் சொந்தமாக இருக்கும்.
இதேபோல ஒரு மனையில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாங்கியிருந்தால், அது இரண்டாகப் பிரிக்கப்படும். மேலேசொன்னபடி உட்பிரிவு செய்து பட்டா வழங்குவார்கள். அதோடு குறிப்பிட்ட அந்தச் சொத்தின் வரைபடத்தில் நமக்குரிய பகுதியைக் குறிப்பிட்டு வருவாய்த் துறை ஆவணப்படுத்தி வைப்பார்கள்.
இதன்மூலம் உங்களுடைய சொத்து முழுமையாக உங்களுடையதாகும். பழைய உரிமையாளர் எக்காரணம் கொண்டும் சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாத நிலை உருவாக்கப்படும்.
எனவே இதுவரை பத்திரப் பதிவு செய்து பட்டா பெறாமல் இருந்தால், இனியும் தாமதிக்க வேண்டாம். உடனே வருவாய்த் துறை அலுவலங்களில் பட்டா கேட்டு விண்ணப்பம் அளிக்கலாம். இந்த உட்பிரிவுப் பட்டா என்பது அடுக்குமாடி வீடுகளுக்கு மட்டுமல்ல. மனைகளுக்கும் மற்ற பயன்பாட்டு நிலங்களுக்கும் பொருந்தக்கூடியது.
நன்றி…..
Leave a Comment