தான பத்திரம் என்றால் என்ன?
யாரெல்லாம் சொத்துக்கு உரிமையாளர் ஆகலாம்?….
தான பத்திரம் என்றால் என்ன?…
ஆங்கிலத்தில் செட்டில்மென்ட் என்று சொல்வார்கள். தன்னுடைய சொத்தை ரத்த உறவுகளுக்கு மட்டும் மாற்றி கொடுப்பதுதான் தான பத்திரம். ரத்த உறவுகள் என்றால் சகோதரன், சகோதரி, மகன், மகள், பேரன், பேத்தி, மகன் வழி கொள்ளு பேரன் போன்றோருக்கு தானமாக எழுதி தரலாம்.
தானம் தருவது என்றால் தான பத்திரம் என்றும், சொத்தை செட்டில்மென்ட் செய்வது போல எழுதினால், செட்டில்மென்ட் என்றும் குறிப்பிடுவார்கள். ‘செட்டில்மென்ட்’ என்று எழுதினால் அதை மாற்ற இயலாது.*
ஆனால், உயில் அப்படி அல்ல. மாற்றி மாற்றி எழுத முடியும். எனவே, அவசர கதியில் செட்டில்மென்ட் எழுதுவதற்கு முன் பல முறை யோசித்து முடிவெடுப்பது சால சிறந்தது. இதை உரிய கட்டணம் செலுத்தி சார்பதிவாளர் அலுவகத்தில் பதிய வேண்டும்.
உயில்…..
இது விருப்ப ஆவணம். சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதி தரும் முறைதான் உயில். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்கு பிறகு, தான் விரும்பும் நபருக்கு தனது சுய நினைவோடு எழுதி தருவதுதான் உயில். ஆனால், பூர்வீக சொத்தை உயிலாக எழுத முடியாது.
தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குதான் உயில் எழுத வேண்டும் என்கிற கட்டாயமில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் கூட உயிலாக எழுதி தர முடியும். அதே நேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து தானாக சேர்ந்து விடும்.
மன நிலை சரியில்லாத நிலையில் அல்லது குடி போதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது, மேலும், மைனர் மீது உயில் எழுதப்படுமானால், அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
வாரிசு சான்றிதழ்……
வங்கி வைப்பு நிதி, பங்கு சந்தை முதலீடு, ம்யூச்சுவல் fund போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில், நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஆனால், நாமினி இல்லாத பட்சத்திலோ, அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்திலோ வாரிசு சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம்.
ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate) அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும்.
பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெற வேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்கு தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாக பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாளில், இது தெரிய வரும்போது அந்த தீவு ரத்து செய்யப்படும்.
முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, இரண்டாவது திருமணத்தை இந்து திருமண சட்டம் அங்கீகரிக்கவில்லை. இதனால், இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமை இல்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோர முடியும்.
பொதுவாக, சொத்து பாக பிரிவினையில் இது போன்று பல அடிப்படை விஷயனகளை கவனித்தாலே, சிக்கல் இல்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு, நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு பொருந்தும் வகையில் ஒருவர் பெயரில் உள்ள சொத்து அவர் மறைவுக்கு பிறகு மற்றவர் உரிமை கொண்டாட வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம், கிறிஸ்துவர், இஸ்லாமியர், பார்சி வகுப்பினருக்கு பொருந்தாது. அதே நேரத்தில் இந்து மக்களுடன் ஒத்து போகும் வீர சைவ, லிங்காயத்து, ஆர்யா சமூகம், பிராமணர் ஆகியவற்றுடன் பௌத்த, சமண, சீக்கிய வகுப்பினருக்கு பொருந்தும்.
இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன் பிரிவினையாகாத இந்து கூட்டு குடும்பத்தில் சொத்து பாகம் பிரிப்பதற்கு முன் குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டால், அவருக்கு சேர வேண்டிய பங்கு சொத்து அவரின் விதவை மனைவிக்கு சேரும். இது இந்து பெண் சொத்துரிமை சட்டம் – 1937 ல் கொண்டு வரப்பட்டது.
இந்த உரிமை அடிப்படையில் பெரும் சொத்தை விற்பனை செய்யவோ அல்லது வேறு விதத்தில் மாற்றம் செய்து கொடுக்கவோ அதிகாரம் வழங்கப்படவில்லை.
மேலும் விதவை பெண் இறந்து விட்டால், அந்த சொத்து அவரது கணவரின் சகோதரருக்கு திரும்ப கொடுக்கும் வகையில் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 1956 ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்து வாரிசு சட்டம் 1956 ன் படி கணவர் மரணமடையும்போது, அவருக்கு சேர வேண்டிய சொத்தின் பங்கு அவரின் மனைவி, தாய், பிள்ளைகள், மகள் அல்லது மருமகள், பேர பிள்ளைகள் என ரத்த சம்பந்தமான உறவினர்களுக்கு சேர்வதுடன், அந்த சொத்தை அவர்கள் சுதந்திரமாக பயன்படுத்துவது, விற்பனை செய்வது அல்லது விரும்பியவருக்கு எழுதி கொடுக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.
இறந்து விடும் இந்து ஆண் மகனின் சொத்தை யார், எப்படி பெற முடியும்?……
இந்து கூட்டு குடும்பத்தில் சொத்து பிரிக்காத நிலையில் ஆண் உறுப்பினர் ஒருவர் மரணமடைந்தால், இந்து வாரிசு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளா வழி காட்டுதல் படி இறந்தவரின் மனைவி, மகன், மகள்கள், இறந்தவருக்கு முன் அவரது ரத்த சம்பந்தமான பேரன், பேத்திகள் (மகன் வழி) என 12 வாரிசுகள், சட்டத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
அதே சமயத்தில் இறந்தவருக்கு நேரடி ரத்த சம்பந்தமான உறவினர்கள் இல்லாத பட்சத்தில் அவருடன் பிறந்த சகோதரன், சகோதரிகள் அல்லது அவரது வாரிசுகள் சொந்தம் கொண்டாட முடியும்.
இறந்தவரின் தந்தை, இறந்தவரின் மகனின் மகள் வழி மகன் (பேரன்), மகனின் மகள் வழி மகள் (பேத்தி), சகோதரர்கள், சகோதரிகள், ரத்த சம்பந்தமான உறவில் வரும் கொள்ளு பேரன், பேத்திகள், சகோதரரின் மகன் அல்லது மகள், சகோதரியின் மகன் அல்லது மகள், இறந்தவரின் தாத்தா அல்லது பாட்டி (தந்தை வழி), இறந்தவரின் சகோதரன் அல்லது அவரின் மனைவி, இறந்தவரின் சித்தப்பா அல்லது சின்னம்மா (தந்தை வழி), இறந்தவரின் தாத்தா அல்லது பாட்டி (தாய் வழி), இறந்தவரின் தாய் மாமன் அல்லது அவரது மனைவி.
இரண்டாம் நிலை வாரிசுகள் என்று மேலே குறிப்பிட்டுள்ள 9 ரத்த சம்பந்தமான உறவினர்கள் இருந்தாலும், இறந்தவரின் தந்தை உயிருடன் இருக்கும்போது அவரது மகனோ, மகளோ, பேரன், பேத்திகளோ சொத்தை சொந்தம் கொண்டாட முடியாது.
நன்றி…
Leave a Comment