புராமிசரி நோட்டு என்றால் என்ன…?
புராமிசரி நோட்டு என்றால் என்ன…?
புரோ நோட்டு என்பதை புராமிசரி நோட்டு (Promissory Note) என்பர்.
இதை I Promise to pay you. “I owe you” (or) “I O U” என்பர்.
“நான் உங்களுக்கு பணம் கொடுக்க உறுதி அளிக்கிறேன்” என்பதே புராமிசரி நோட்டு.
ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்து அவசரத்துக்கு கடன் வாங்குவதை ஊக்குவிக்க இந்த முறையை உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பின்பற்றுகின்றனர். இது வியாபார கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்போது உதவியாக இருந்தது.
இரண்டு அறிமுகமான வியாபாரிகள் ஒருவருக்கு ஒருவர், “வரும் நபரிடம் பணம் கொடுக்கும்படி” எழுதிக் கொடுக்கும் சீட்டுக்கு “உண்டி” என்று பெயர்.
ஒரு நம்பிக்கைக்கு
உரிய வாடிக்கையாளர், தனது பாங்குக்கு “எனது சீட்டைக் கொண்டு வரும் நபரிடம் பணம் கொடுக்கவும்” என்று எழுதிக் கொடுப்பதை பில் அல்லது பில் ஆப் எக்சேன்ஸ் Bill of Exchange என்பர். இது இரண்டு வியாபாரிகளுக்கு உள்ளும் நடக்கும்.
“என் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து, இந்த சீட்டில் குறிப்பிட்டு இருக்கும் தொகையை, இதைக் கொண்டு வரும் நபரிடம் கொடுக்கவும்” என்று எழுதிக் கொடுப்பதை செக் என்னும் காசோலை Cheque என்பர்.
ஆக இது எல்லாமே பணம் கொடுக்கச் சொல்லும் அதிகாரச் சீட்டுகள். அதேபோல்,
புரோ நோட்டடும், “நான்
உங்களுக்கு பணம் கொடுக்கிறேன்” என்று எழுதிக் கொடுத்த உறுதிச் சீட்டுதான்.
இவை எல்லாமே ஒரு அவசர தேவைக்கோ, வியாபார வசதிக்கோ, கொடுக்கல் வாங்கலில் பண பறிமாற்றத்துக்கோ, அன்றாட நடைமுறையில் இருந்து வரும் உறுதிச் சீட்டுக்கள்.
அரசும், ரிசர்வ் வங்கியும் கொடுத்திருக்கும் நாம் அன்றாடம் உபயோகிக்கும் கரென்சி நோட்டும் ஒருவகையில் உறுதிச் சீட்டுத்தான். (RBI வங்கியின் கவர்னர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த உறுதிச் சீட்டு; அதாவது இந்த சீட்டைக் கொண்டுவரும் நபருக்கு, அதில் குறிப்பிட்டுள்ள தொகைக்கு மாற்றுப் பொருள் கொடுக்கலாம் என்று எழுதிக் கொடுத்த உறுதிச் சீட்டு).
இவை எல்லாவற்றையும் சட்டத்தில் ஒழுங்கு படுத்தி, அதற்கான சட்டமாக The Negotiable Instruments Act, 1881 என்று பெயர். 1881லிலேயே இந்தியாவில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. இந்தச் சட்டத்தில் 17 அத்தியாயங்களில் 148 பிரிவுகள் (148 Sections in 17 Chapters) உள்ளன.
1) Preliminary (Sec.1 to 3)
2) Notes, Bills, Cheques (Sec.4 to 25)
3) Parties to Notes, Bills, Cheques (Sec.26 to 45A)
4) Negotiation (Sec.46 to 60)
5) Presentment (Sec.61 to 77)
6) Payment and Interest (Sec.78 to 81)
7) Discharge from Liability on Notes, Bills, and Cheques (Sec.82 to 90)
8) Notice of Dishonour (Sec.91 to 98)
9) Noting and protest (Sec.99 to 104A)
10) Reasonable time (Sec.105 to 107)
11) Acceptance and payment (Sec.108 to 116)
12) Compensation (Sec.117)
13) Special Rules of evidence (Sec.118 to 122)
14) Crossed Cheques (Sec.123 to 131A)
15) Bills in sets (Sec.132 and 133)
16) International Law (Sec.134 to 137)
17) Penalties in case of dishonour (Sec.138 to 148)
முதலில், மக்களிடம் பண்ட மாற்றுமுறை இருந்தது. பின்னர் அரசர்கள், தங்கள் முத்திரையுடன் கூடிய தங்கம், வெள்ளி, பித்தளை, தோல், இவற்றின் அடையாள வில்லைகளை உறுதிச் சீட்டாக கொடுத்தார்கள். இது பொதுவாக எல்லா மக்களிடமும் புழக்கத்தில் இருந்தது. வியாபாரிகள் தங்களுக்கு வசதியாக உண்டி என்னும் சீட்டுக்களை அவர்களுக்கு மட்டுமே உபயோகித்துக் கொண்டார்கள். காலம் மாற மாற வேறு வேறு முறைகள் வந்து விட்டன. உண்டி, புரோநோட், பில், கரென்சி நோட்டு இவைகள் புழக்கத்தில் வந்த காலத்தில், அவைகளின் நடைமுறையை ஒழுங்குபடுத்த, இந்த Negotiable Instrument Act 1881 வந்தது. இதை சாதாரண மொழியில் சொன்னால், கொடுக்கல்-வாங்கல் சீட்டுக்களின் சட்டம் எனலாம்.
Promissory Note என்பது ஒருவர், மற்றவருக்கு பணம் கொடுப்பது உறுதி செய்து எழுதிக் கொடுத்த சீட்டு. (எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுப்பதாக).
Bill of Exchange என்பது இந்த சீட்டை கொண்டுவரும் நபரிடம் இந்த தொகையை கொடுக்கும்படி, ஒரு குறிப்பிட்ட நபருக்கு எழுதிக் கொடுக்கும் சீட்டு.
Cheque என்பது இதுவும் ஒரு பில் ஆப் எக்சேன்ஸ் போலவே இருக்கும். ஆனால், ஒரு வங்கிக்கு, இந்த சீட்டைக் கொண்டுவரும் நபரிடம் பணம் கொடுக்கும்படி எழுதிக் கொடுக்கும் சீட்டு.
மேலே சொன்ன இந்தச் சீட்டுக்களில், அதை வைத்திருப்பவர் மேல் எழுத்துச் செய்து வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி பணம் கொடுக்கச் சொல்லலாம். ஆகையால்தான் இவை எல்லாமே Negotiable Instrument மாற்றிக் கொள்ளும் சீட்டு என்ற இந்த சட்டத்தில் வருகிறது.
புராமிசரி நோட்டு:
புரோ நோட்டு அல்லது புராமிசரி நோட்டு என்பதை ஒரு சாதாரண பேப்பரில் “நான் உங்களுக்கு பணம் கொடுக்கிறேன்” என்று மட்டுமே எழுதிக் கொடுக்க வேண்டும். வட்டியுடன் கொடுக்கிறேன் என்றும் எழுதிக் கொள்ளலாம். வேறு எந்த நிபந்தனைகளும் அதில் எழுதி இருக்கக் கூடாது. நிபந்தனை, அக்ரிமெண்ட் ஏதும் இல்லாமல் எழுதிக் கொடுத்தால்தான் அது புரோ நோட்டு. “நான் பணம் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் எனது சொத்தை எடுத்துக் கொள்ளலாம்” என்பது போன்ற வார்த்தைகள் அதில் வரக்கூடாது. அப்படி ஏதாவது இருந்தால் அதை பாண்டு Bond என்பர். அதாவது அக்ரிமெண்ட் என்னும் உடன்படிக்கைகள் இருந்தால் அது பாண்டு. அதை புரோ நோட்டு வகையில் சேர்க்க முடியாது. புரோ நோட்டுக்கு எந்த நிபந்தனையும் இருக்க கூடாது. Unconditional undertaking to pay.
ஒரு உறுதிச் சீட்டை, அது புராமிசரி நோட்டா, இல்லை அது பாண்டு வகையைச் சேர்ந்ததா என்பதை அதில் எழுதி இருக்கும் வாசகங்களைக் கொண்டுதான் முடிவுக்கு வர முடியும். எனவே நான் இதைச் செய்கிறேன், நீங்கள் அதைச் செய்யவேண்டும் என்று எழுதியதை பாண்டு என்ற வகையில் கொள்ள வேண்டும். எந்த நிபந்தனையும் இல்லாமல், “நான் பணம் தருகிறேன்” என்ற வார்த்தைகள் மட்டும் இருந்தால் மட்டுமே அது புரோ நோட்டு.
புரோநோட்டு என்பது அவசரத் தேவைக்கு பணம் கொடுக்கல் வாங்கல் செய்வதால், அதற்கு பத்திரம் என்னும் ஸ்டாம்பு பேப்பரில் எழுதத் தேவையில்லை. ஆனால் பாண்டு என்பது அக்ரிமெண்ட் போல, எனவே அதற்கு பத்திரம் என்னும் ஸ்டாம்பு பேப்பரில் எழுத வேண்டும். மேலும், புரோ நோட்டுக்கு, ரெவின்யூ ஸ்டாம்பு ஒன்று (25 பைசா மதிப்புக்கு மட்டும்) ஒட்டி அதில் கையெழுத்துப் போட்டால் போதும். எவ்வளவு பணமாக இருந்தாலும் 25 பைசா ரெவின்யூ ஸ்டாம்பு போதும். இப்போது 25 பைசா ரெவின்யூ ஸ்டாம்பு புழக்கத்தில் இல்லை என்பதால் ரு.1-க்கு உள்ள ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், பாண்டு என்பதற்கு பத்திரம் வாங்கி அதில் எழுத வேண்டும். அதில் குறிப்பிடும் பண மதிப்புக்கு 4% ஸ்டாம்ப் அளவுக்கு வாங்கி எழுத வேண்டும். எனவேதான், புரோ நோட் எழுதும் போது, அதற்குறிய வார்த்தைகள் தவிர வேறு வார்த்தைகளை உபயோகப் படுத்தக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. மேலும், புரோ நோட் என்பது, அதை எழுதி வாங்கியவர் (பணம் கொடுத்தவர்) அதை வேறு ஒருவருக்கு மாற்ற முடியும். அவ்வாறு மாற்ற முடியும் தன்மை கொண்டதே புரோ நோட்டு. ஆனால், பாண்டு அவ்வாறு வேறு ஒருவருக்கு அதன் உரிமையை மாற்ற முடியாது.
புரோ நோட்டின் தன்மைகளும் அதன் சட்டங்களும்:
1) புரோ நோட்டை சாதாண பேப்பரில் எழுதினால் போதும், அதில் ரெவின்யூ ஸ்டாம்ப் 25பைசாவுக்கு ஒட்டினால் போதும். எவ்வளவு பணமாக இருந்தாலும் 25 பைசா ரெவின்யூ ஸ்டாம்பே போதும்.
2) ஸ்டாம்பின் மீது, கடன் வாங்கியவரின் கையெழுத்து இருக்க வேண்டும்.
3) அசலையும் வட்டியையும் திருப்பிக் கொடுப்பதாக உறுதி செய்து எழுதினால் போதும். வேறு உறுதிமொழி வாசகங்கள் அல்லது உடன்படிக்கைகள் இருக்க கூடாது.
4) தேதி இருக்க வேண்டும். எழுதிக்கொடுப்பவர் பெயர் விலாசம், கடன் கொடுத்தவர் பெயர் விலாசம், கடன் தொகை, வட்டி, இவை இருந்தால் போதும்.
5) புரோநோட்டை எழுதும்போது தவறு இல்லாமல் எழுத வேண்டும். தவறு ஏற்பட்டால், அதற்கு பக்கத்திலும் கையெழுத்துச் செய்து அதை உறுதிப் படுத்த வேண்டும்.
6) புரோ நோட்டுக்கு சாட்சிகள் தேவையில்லை. (எப்படி செக்குக்கு சாட்சிகள் போட மாட்டோமோ அப்படியே புரோ நோட்டுக்கும்; ஆனாலும், பழக்கத்தில் எல்லோரும் புரோ நோட்டில் சாட்சிகளின் கையெழுத்தையும் வாங்குகிறோம். அது அவசியம் இல்லை என்று சட்டம் சொல்கிறது).
7) புரோ நோட்டின் பேரில் கடன் கொடுத்தவர், அந்த புரோ நோட்டில் பணத்தை வசூலித்துக் கொள்ள, அதை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்க முடியும். அதை made-over மேடோவர் அல்லது மேல்எழுத்து என்பர். அவ்வாறு வேறு ஒருவர் பெயருக்கு மாற்றினால், அதை கடன் வாங்கியவருக்கு தெரியப் படுத்தினால் போதும். மாற்றி வாங்கிக் கொண்டவர், அந்த புரோநோட்டுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை, கடன் வாங்கியவரிடமிருந்து வசூல் செய்து கொள்ளலாம். இதனால்தான் இது Negotiable Instrument என்று சொல்லப்படுகிறது.
8) புரோநோட்டில் 25 பைசாவுக்கு குறைவான ரெவின்யூ ஸ்டாம்பு ஒட்டி இருந்தால் அந்த புரோ நோட்டு சட்டப்படி செல்லாது. அதை அபராத ஸ்டாம்பு கட்டணம் கட்டினால், சரி செய்ய முடியாது (இது புரோ நோட்டுக்கு மட்டுமே இருக்கும் குறை; மற்ற பத்திரங்களில் குறைவான ஸ்டாம்பு செலுத்தி இருந்தால், அதை 10% அபராதம் கட்டி சரி செய்து கொள்ளலாம்). புரோ நோட்டில் அப்படி செய்ய முடியாது.
9) புரோநோட்டை எழுதிக் கொடுத்த தேதியில் இருந்து மூன்று வருட காலத்துக்குள் அந்த பணத்தை வசூல் செய்ய கோர்ட்டில் வழக்குப் போடலாம். அதைத் தாண்டி விட்டால் வழக்கே போட முடியாது.
10) புரோநோட்டின் தேதி மூன்று வருடம் என்பதால், அதற்கு முன்னர், அதில் ஏதாவது ஒரு பணத்துக்கு (அசலுக்கோ, வட்டிக்கோ) வரவு எழுதி, அந்த புரோ நோட்டை எழுதிக் கொடுத்தவரே கையெழுத்தும் செய்திருந்தால், மேலும் மூன்று ஆண்டுகளுக்குச் செல்லும். இப்படியாக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் கடன் வாங்கியவர் அதை அவ்வாறு எழுதிக் கொடுக்க வேண்டும்.
11) புரோநோட்டின் கையெழுத்து என்னுடையதுதான் என்று கடன் வாங்கியவர் ஒப்புக் கொண்டால், அதில் பணம் கொடுத்ததை தனியே நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த புரோ நோட்டில் பணம் கொடுக்கபட்டுள்ளது என்று கோர்ட் கருத வேண்டும் என இந்தச் சட்டம் சொல்கிறது.
12) புரோ நோட்டில் பணம் கொடுத்ததை, அவ்வாறு பணம் கொடுத்தவர் நிரூபிக்க வேண்டும். ஆனால் கடன் வாங்கியவர், புரோ நோட்டில் உள்ளது என் கையெழுத்துத்தான் என்று ஒப்புக் கொண்டால், அவ்வாறு பணம் கொடுத்ததை நிரூபிக்கத் தேவையில்லை. ஆனாலும், கடன் வாங்கியவர், “இது என் கையெழுத்து இல்லை என்றாலோ, நான் பணமே வாங்கவில்லை என்று சொன்னாலோ” பணம் கொடுத்தவர், அப்படி பணமாகக் கொடுத்ததாகவும், அவரின் கையெழுத்துத் தான் என்று நிரூபிக்கும் பொறுப்பு கடன் கொடுத்தவருக்கு உண்டு.
13) புரோ நோட்டில் என்ன வட்டி கொடுப்பதாக ஒப்புக் கொண்டாறோ அதே வட்டியை அவர் கொடுக்க வேண்டும். ஆனால் வழக்கில் இருக்கும் புரோ நோட்டுக்கு, வழக்கு நடக்கும் காலத்தில் கோர்ட் ஒரு வட்டியை நிர்ணயம் செய்யும். அதேபோல, வழக்கு முடிந்தபின்னர் எவ்வளவு வட்டி என்பதையும் கோர்டே முடிவு செய்யும். வழக்கு முடிந்த பின்னர் உள்ள வட்டி 6% வருட வட்டி என சிபிசி சட்டம் உறுதி செய்து விட்டது. அதற்கு மேல் கேட்க முடியாது.
14) புரோ நோட்டை On demand என்னும் கேட்கும்போது பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று எழுதிக் கொள்ள வேண்டும். இன்னும் 6 மாதம் கழித்துக் கொடுக்கிறேன், ஒரு வருடம் கழித்துக் கொடுக்கிறேன் என்று எழுதி இருந்தால், அது ஆண்டிமாண்ட் புரோ நோட் வகையில் வராது. அதில் அக்ரிமெண்ட் வாசகம் வந்து விட்டதால், Otherwise than On Demand என்று வரும். அது பாண்டு ஆகிவிடும். அதற்கு ரெவின்யூ ஸ்டாம்பு ஒட்டிய புரோ நோட்டு பொருந்தாது. மேலும் ஸ்டாம்ப் கட்டணம் செலுத்த வேண்டும். தவறி இருந்தால் 10% அபராத ஸ்டாம்பு கட்டணமும் சேர்த்தே கட்ட வேண்டும். அதற்கு சாட்சிகளும் அவசியம் இருக்க வேண்டும். எனவே தான், புரோ நோட்டு எழுதும் போது, காலக் கெடுவை “கேட்கும்போது” On demand என்று முதல் வரியிலேயே ஆரம்பித்து எழுத வேண்டும்.
15) சிலர் புரோ நோட்டை ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டாமல், ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொள்வார்கள். இது சட்டப்படி தவறு. ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி இருந்தாலும், அதற்கு ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால்தான் அது சட்டப்படி செல்லும். கிராமங்களில், புரோ நோட்டை ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொள்வது வழக்கமாக உள்ளது. அப்படி ஸ்டாம்ப் பேப்பரில் எழுதினால், பாதுகாப்பாக இருக்கும் என நினைக்கிறார்கள். அது தவறு. புரோ நோட்டை ஸ்டாம்ப் பேப்பரில் எழுதவே கூடாது. அப்படியே ஸ்டாம்ப் பேப்பரில் எழுதினாலும் அது ஒரு வெற்றுக் காகிதம் என நினைத்து, அதில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியே கையெழுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அதை கோர்ட்டில் வழக்காக தாக்கல் செய்ய முடியும். (பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டால் பிரச்சனை இல்லை; வழக்குக்கு வரும்போதுதான் அது செல்லாதது ஆகிவிடுகிறது…
Leave a Comment